பாடம்-6
சி-மொழியில் மாறிகள்
(Variables in C)

கம்ப்யூட்டர் மொழிகளில் டேட்டாவை இரண்டு வகையாகக் கையாள முடியும்:

1. மாறிகள் (variables)
2. மாறிலிகள் (constants)

ஒரு புரோகிராம் செயல்படுத்தப்படும்போது, மதிப்பு மாறக்கூடிய வாய்ப்பிருக்கும் டேட்டா, மாறி (variables) எனப்படுகிறது. LEAPYEAR.C புரோகிராமை எடுத்துக் கொள்வோம். அதில் y-ன் மதிப்பு ஒவ்வொரு முறை புரோகிராம் இயக்கப்படும்போதும், நமது உள்ளீட்டுக்கு ஏற்ப மாறுகின்றது. எனவே, இதனை மாறி என்கிறோம். மாறிலி (constants) என்பது மாறா மதிப்பைக் கொண்டது. மாறிலி அறிவிக்கப்படும்போது அதில் இருத்தப்படும் மதிப்புப் புரோகிராமில் பின் எப்போதும் மாற்றப்பட முடியாதது. முதலில் மாறிகள் பற்றிக் காண்போம்.

நாம் பார்த்த நான்கு தரவு இனங்களில் மட்டும் இன்றி, அவற்றின் உள்-வகைகளிலும், தருவிக்கப்பட்ட தரவு இனங்களான அர்ரே, ஸ்ட்ரக்சர், யூனியன், ஈநம், பாயின்டர் ஆகிய தரவு இனங்களிலும் மாறிகள் அறிவிக்கப்பட்டுக் கையாளப்படுகின்றன. சி-மொழியில் லாஜிக்கல் (அல்லது பூலியன்) மாறிகள், ஸ்டிரிங் மாறிகள் கிடையாது என்பதை மனதில் இருத்துங்கள்.

மாறிகளைப் புரோகிராம்களில் எடுத்தாள்வதற்குப் பல்வேறு வழிமுறைகளும் விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகக் காண்போம்.

 மாறிகளின் பெயர்கள்

புரோகிராமில் பயன்படுத்தப்படும் டேட்டா கம்ப்யூட்டரின் நினைவகத்தில் பதிந்து வைக்கப்பட்டு எடுத்தாளப்படுகின்றது. தேவையானபோது எடுத்தாள அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். எனவே, புரோகிராமில் பயன்படுத்தப்படும் டேட்டாவுக்குப் பொருத்தமான ஒரு பெயரைச் சூட்டுகிறோம். அதாவது, டேட்டாவை நினைவகத்தில் பதிந்து வைக்க ஓர் இடத்தை ஒதுக்கீடு செய்து, அந்த இடத்துக்கு ஒரு பெயர் (Label) சூட்டுகிறோம். அப்பெயரையே மாறி (variable) என்கிறோம்.

மாறிகளின் பெயர்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள்:

(1) மாறிகளின் பெயர்கள் அதிக அளவாக எட்டு எழுத்துகள் இருக்கலாம். ஆனால் புதிய கம்ப்பைலர்கள் 16 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளையும் ஒத்துக் கொள்கின்றன. அதிக அளவாக 31 எழுத்துகளை அடையளம் காண முடியும் என அன்சி-சி வரையறுத்துள்ளது.

(2) மாறிகளின் பெயர்கள் எண்ணாகவோ, எண்ணில் தொடங்குமாறோ இருக்கக் கூடாது.

(3) மாறிகளின் பெயரில் இடவெளி (space) இடம்பெறக் கூடாது.

(4) அண்டர் ஸ்கோர் தவிர பிற சிறப்புக் குறிகள் இடம்பெறக் கூடாது.

(5) மாறிகளின் பெயர்களாக சி-மொழியின் சிறப்புச் சொற்களைப் (Reserved Words) பயன்படுத்தக்கூடாது.

மாறிகளின் சரியான பெயர்களுக்கு எடுத்துக்காட்டுகள்:

1. a, b, c, ab, xyz, A, Bc,aBC
2. a1, B2, C2c, x1y2z3
3. name, age, pay, area, redius
4. SUM, Sum, sum, average, dBASE
5. a_1, file_2, basic_pay, data_of_birth
6. lotus123, art312C, sys5ver6

மாறிகளுக்கு எப்போதுமே பொருத்தமான பெயர்களைச் சூட்ட வேண்டும். வெறுமனே ஒற்றை எழுத்துகளை மட்டுமே மாறிகளின் பெயர்களாக அறிவிப்பது சிறந்த முறை ஆகாது. ஒரு பணியாளரின் பெயர், வயது, சம்பளம் போன்றவற்றைக் கையாள முறையே a, b, c எனக் குறிப்பிடக் கூடாது. பொருத்தமாக name, age, salary எனப் பெயரிடலாம். total amount, rate of interest என இரண்டு மூன்று சொற்களில் மாறிகளின் பெயர்களை அமைக்க விரும்பினால் சொற்களுக்கு இடையே அண்டர் ஸ்கோர் பயன்படுத்தி, total_amount, rate_of_interest என மாறிகளின் பெயர்களை அறிவிக்க வேண்டும். மாறிகளின் பெயர்கள் எப்போதும் சிறிய எழுத்தில் இருப்பதே மரபு.

மாறிகளின் தவறான பெயர்களுக்கு எடுத்துக்காட்டுகள்:

(1) 2, 32, 123 - எண்களாக இருக்கக் கூடாது
(2) 2A, 4BCD, 5digit
- எண்ணில் தொடங்கக் கூடாது
(3) basic pay, date of birth
- இடவெளி கூடாது
(4) yes/no, bill.amt, month-total
- சிறப்புக் குறிகள் கூடாது
(5) int, char, float
- சிறப்புச் சொற்கள் கூடாது
(6) while, do, else, return
- கட்டளைச் சொற்கள் கூடாது

 மாறிகளை அறிவித்தல்

புரோகிராம்களில் மாறிகளை அறிவிக்கும் முறைக்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

char ch;
int age;
long salary;
float radius;
double area;

ஒரே இனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளையும் அறிவிக்க முடியும்.

int i, j, k;
float radius, area;

ஒரே இனமாக இருந்த போதிலும் வேறுவேறு பயன்பாடுகளுக்கான மாறிகளைத் தனித்தனி வரிகளில் அறிவிப்பது மரபாகும்.

int i, j;
int length, breadth;

 அறிவிப்பும் வரையறுப்பும் (Declaration & Definition)

ஒரு மாறி, மதிப்பை ஏற்ற பிறகே ‘இனிஷியலைஸ்’ செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும். இனிஷியலைஸ் செய்யப்பட்ட பிறகே அந்த மாறி வரையறுக்கப்பட்டதாகக் (defined) கருதப்படும். இனிஷியலைஸ் செய்யப்படாத மாறியை எக்ஸ்பிரஷன்களில் பயன்படுத்தினால் கம்ப்பைலர் எச்சரிக்கை செய்யும்.

ஒரு மாறியை இரண்டு வழிகளில் இனிஷியலைஸ் செய்யலாம். மாறியை அறிவித்த பிறகு புரோகிராமின் வேறோர் இடத்தில் அதில் மதிப்பை இருத்துவது ஒரு முறை. அறிவிக்கும்போதே அதில் தொடக்க மதிப்பை இருத்துவது இன்னொரு முறை.

int a;
...........
a = 5;

என்று மதிப்பிருத்தலாம்.

int sum = 0;
int a = 100;
char ch = ‘A’;

என்றும் மாறிகளை வரையறுக்கலாம். ஒரே அறிவிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை அறிவிக்கும்போது, சிலவற்றை மட்டும் இனிஷியலைஸ் செய்யலாம்.

int m, n, sum = 0;
int start = 1, end, step = 5, sum;

என்றெல்லாம் அறிவிக்க முடியும். மிகவும் கறாராகக் கூறுவது எனில்,

int m;

என்று மாறியை மட்டும் மதிப்பிருத்தாமல் குறிப்பிடுவது ‘அறிவிப்பு’ (Declaration) எனப்படும்.

int m = 5;

என்றோ,

int m;
m = 5;

என்றோ மாறியை இனிஷியலைஸ் செய்வது ‘வரையறுப்பு’ (Definition) எனப்படும். எந்தவொரு மதிப்பையும் ஏற்காமல் அறிவிப்பு நிலையிலேயே இருக்கும் மாறி வரையறுக்கப்படாத மாறி எனப்படுகிறது.

சி-மொழிப் புரோகிராமில் பெரும்பாலும் மாறிகள் புரோகிராமின் அல்லது ஒரு ஃபங்ஷனின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்படுகின்றன. மிக அரிதாக ஒரு பிளாக்குக்குள் மாறிகள் அறிவிக்கப்படுவதுண்டு. { } என்னும் இரட்டை அடைப்புக் குறிகளுக்குள் அமையும் கட்டளைத் தொகுதி சி-மொழியில் பிளாக் எனப்படுகிறது இதைப்பற்றி பின்னர் விரிவாக படிப்போம்.

main() அல்லது வேறு ஃபங்ஷனில் அல்லது பிளாக்கில் மாறிகளின் அறிவிப்புக்கு முன்பாக printf(), scanf() ஃபங்ஷன்களோ அல்லது வேறெந்தக் கட்டளையுமோ இடம்பெறக் கூடாது. இன்னொரு கோணத்தில் சொல்வதெனில், சி-மொழிப் புரோகிராமில் மாறிகளை இடையிடையே நினைத்த இடத்தில் அறிவித்துக் கொள்ள முடியாது. மேலேயுள்ள புரோகிராமை நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். radius, pai, area ஆகிய மாறிகள்/மாறிலிகள் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளன.

printf("\nEnter redius:”);
scanf("%d, &redius);
float area;
area = pai * redius * redius;

என்று கட்டளைகள் அமைத்தால் புரோகிராம் கம்ப்பைல் ஆகாது.

ஒரு ஃபங்ஷனுக்குள் அல்லது ஒரு பிளாக்கினுள் ஒரே பெயரில் இரண்டு மாறிகள் இருக்க முடியாது. அதாவது ஒருமுறை அறிவித்த மாறியை மீண்டும் அறிவிக்க முடியாது. அதாவது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு மாறியின் பெயரில் வேறொரு மாறியை அறிவிக்க முடியாது. வெவ்வேறு ஃபங்ஷன்களில் அல்லது வெவ்வேறு பிளாக்குகளில் ஒரே பெயரில் வெவ்வேறு மாறிகளைப் பயன்படுத்த முடியும்.

மாறிகளை அறிவிக்கும் விதம் தொடர்பாக, மனதில் பதிய வைக்க வேண்டிய விவரங்களைத் தொகுத்துக் காண்போம்:

(1) மாறிகள் புரோகிராம், ஃபங்ஷன் அல்லது பிளாக்கின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட வேண்டும்.

(2) மாறிகளின் இனத்தை முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இனம் சுட்டாத மாறி இருக்க முடியாது. வேறுசில மொழிகளில் இருப்பதுபோல் முதலில் மாறியை அறிவித்துவிட்டுப் பிறகு இனத்தைத் தீர்மானிக்க சி-மொழியில் அனுமதி இல்லை.

(3) ஒரு ஃபங்ஷனுக்குள் அல்லது ஒரு பிளாக்கினுள் ஒரே பெயரில் இரண்டு மாறிகள் இருக்க முடியாது.

(4) ஓர் இன மாறியில் வேறு இன மதிப்பை இருத்த முடியாது. (int மாறி என அறிவித்து விட்டால், அதில் float மதிப்பை இருத்தி வைக்க முடியாது). இனமாற்றம் செய்து இருத்தலாம். இனமாற்றம் பற்றிப் பிறகு படிப்போம்.

(5) ஒரு மாறியை அறிவிக்கும்போதே அதில் தொடக்க மதிப்பையும் இருத்த முடியும்.

(6) ஒரே இனமுள்ள பல மாறிகளை ஒரே வரியில் முன்னறிவிக்கலாம். இரண்டு மாறிகளுக்கிடையே காற்புள்ளி இடவேண்டும்.

(7) மதிப்பு இருத்தப்பட்ட மாறி இனிஷியலைஸ் செய்யப்பட்ட மாறி எனப்படும். இனிஷியலைஸ் செய்யப்பட்ட மாறி வரையறுக்கப்பட்ட மாறி ஆகிறது.

(8) வரையறுக்கப்படாத அதாவது இனிஷியலைஸ் செய்யப்படாத (மதிப்பு இருத்தப்படாத) மாறிகளை எக்ஸ்பிரஷன்களில் பயன்படுத்தக் கூடாது.

[பாடம்-6 முற்றும்]