அயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை!




                            நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.
குறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது? இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.
ஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.
ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.
அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.
டிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்கள். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது.
அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்ம ஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்ம ஸ்தான் தபால் ஆபீஸ். முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.
சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.
பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.
அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.
பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.
நாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட்டார்கள். அதுபோலத்தானே இதுவும்.
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.
சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.
மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.
நீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நன்றி தினமணி